தர்ப்பணத்துக்கு தடை; நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரை வெறிச்சோடியது
ஆடி அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரை வெறிச்சோடியது.
நெல்லை:
ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகள் வெறிச்சோடியது. இதனால் மக்கள் சிலர் தங்களது வீடுகளிலேயே வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று ஆடி அமாவாசை தினம் ஆகும். ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆடி அமாவாசையில் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகர பகுதியான குறுக்குதுறை படித்துறைகள், சந்திப்பு கைலாசபுரம், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆற்றங்கரை வெறிச்சோடியது
போலீசார் அதிகாலை நேரத்தில் யாரையும் ஆற்றுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. தர்ப்பணம், திதி கொடுக்கும் நோக்கில் ஆற்றுக்கு செல்ல முயற்சி செய்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.
மேலும் வழக்கமாக குளிக்க சென்றவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு போடப்படாத ஒருசில ஆற்றங்கரை பகுதியில் சிலர் தர்ப்பணம் கொடுத்தனர்.
பாபநாசம் படித்துறை
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாசர் கோவிலில் ஆடி அமாவாசைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து, கோவில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறையில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் கோவிலுக்கு செல்லவும், ஆற்றில் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டதால் பாபநாசம் படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வீடுகளில் வழிபாடு
இந்த தடை காரணமாக பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் முன்னோர்களின் உருவப்படங்களை வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் குளித்து, தர்ப்பண நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
Related Tags :
Next Story