குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிபப்ு
மேற்கு தொடச்சி மலையில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும்.
இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள்.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இருந்தபோதிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது. அருவியில் குளிக்க முடியாததால் ஒரு சில சுற்றுலா பயணிகள் அருவி தண்ணீர் செல்லும் பாதையில் குளித்துச் சென்றனர்.
ஆடி அமாவாசை
இதற்கிடையே நேற்று அடி அமாவாசை என்பதால் குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள் அருவி பகுதிக்கு செல்ல முடியாதபடி தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story