தமிழகம், ஆந்திராவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
தமிழகம், ஆந்திராவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மந்திரி முனிரத்னா உத்தரவிட்டுள்ளார்.
கோலார்:
ஆலோசனை கூட்டம்
கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரி முனிரத்னா தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மந்திரி முனிரத்னா பேசியதாவது:-
தீவிர நடவடிக்கை
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்தது. தற்போது மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலையை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோலார் மாவட்டத்திலும் கொரோனா 3-வது அலையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் படுக்கைகள், ஆக்சிஜன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் தூய்மைப்படுத்தி சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
கேரளா, மராட்டிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்து ஏராளமான மக்கள் கோலார் வழியாக கர்நாடகம் வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும்.
இதனால் தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்து கோலார் வழியாக கர்நாடகம் வருபவர்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனால் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களை கர்நாடகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
கோலார் மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக வழங்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டம்
பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த மந்திரி முனிரத்னா நிருபர்களிடம் கூறுகையில், ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதி. அந்த மந்திரிசபை விரிவாக்கத்தின்போது ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி கட்டாயம் கிடைக்கும் என்றார்.
முன்னதாக கோலாருக்கு மந்திரி முனிரத்னா வந்தார். அப்போது பா.ஜனதாவை சேர்ந்த சிலர், பூர்ணிமாவுக்கு மந்திரி பதவி வழங்காததை கண்டித்தும், முனிரத்னா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story