இந்திரா உணவகத்தின் பெயரை ‘அன்னபூர்னேஸ்வரி’ என்று மாற்றினால் என்ன தவறு? - மந்திரி சுதாகர் கேள்வி
இந்திரா உணவகத்தின் பெயரை ‘அன்னபூர்னேஸ்வரி’ உணவகம் என்று மாற்றினால் என்ன தவறு என்று மந்திரி சுதாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
இந்திரா உணவகம்
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா மலிவு விலை உணவகம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அந்த உணவகம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திரா மலிவு விலை உணவகத்தின் பெயரை அன்னபூர்னேஸ்வரி உணவகம் என்று மாற்ற வேண்டும் எனக்கோரி முன்னாள் மந்திரியும், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.
அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து மந்திரி சுதாகர் நேற்று சிக்பள்ளாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திரா உணவகத்திற்கு அன்னபூர்னேஸ்வரி உணவகம் என்று பெயர் மாற்றம் செய்வதில் எந்த தவறும் இல்லை. இதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?. இதுபற்றி அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அன்னபூர்னேஸ்வரி, நாம் அனைவருக்கும் தாய். இந்திரா உணவகத்திற்கு அன்னபூர்னேஸ்வரி உணவகம் என்று பெயர் மாற்றம் செய்யக்கூடாதா?.
கொரோனா 3-வது அலை
மந்திரிகள் ஆனந்த் சிங்கும், எம்.டி.பி. நாகராஜும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளால் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று(நேற்று) காலையில் இதுதொடர்பாக ஆனந்த்சிங்கிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியிருக்கிறார். அதில் ஆனந்த்சிங் சமாதானமும் அடைந்திருக்கிரார். மாநிலத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் இருக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மந்திரி சுதாகர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு வந்தவர். அதாவது சித்தராமையா ஆட்சி காலத்தில், சுதாகர் காங்கிரசில் அங்கம் வகித்தார். பின்னர் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியின்போது காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story