நாட்டிலேயே முதலாவதாக கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு அனுமதி - மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி


நாட்டிலேயே முதலாவதாக கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு அனுமதி - மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
x
தினத்தந்தி 9 Aug 2021 2:30 AM IST (Updated: 9 Aug 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே முதலாவதாக கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு:

  உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கன்னட பாடம்

  கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலம் கர்நாடகம். தேசிய கல்வி கொள்கையின் வழிகாட்டுதல்படி இந்த கொள்கை செயல்படுத்தப்படும். பி.யூ.சி.யில் கன்னட மொழியை படிக்காதவர்களுக்கு, டிகிரியில் தனியாக கன்னட பாடம் தயாரிக்கப்பட்டு கற்பிக்கப்படும்.

  டிகிரி படிப்பில் சேர்ந்து ஓராண்டிலேயே படிப்பை தொடர முடியாமல் விலகினால், அத்தகைய மாணவர்களுக்கு ஓராண்டு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதே போல் 2 ஆண்டுகளை முடித்துவிட்டு படிப்பை தொடர முடியாதவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். 3-வது ஆண்டுடன் படிப்பை கைவிடும் மாணவர்களுக்கு டிகிரி சான்றிதழ் வழங்கப்படும்.

பி.எச்.டி.யில் சேர முடியும்

  4 ஆண்டுகளை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு ஹானர்ஸ் டிகிரி பட்டம் கிடைக்கும். டிகிரி படிப்பில் ஆராய்ச்சி பிரிவு இடம் பெற்றிருந்தால், அத்தகைய மாணவர்கள் டிகிரி முடித்த கையோடு நேரடியாக பி.எச்.டி.யில் சேர முடியும். முன்பு 3 ஆண்டுகளில் டிகிரி முடித்த மாணவர்கள், ஹானர்ஸ் படிக்க விரும்பினால் அவர்கள் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும் சேர்ந்து அந்த ஹானர்ஸ் படிப்பை முடிக்கலாம்.

  ஹானர்ஸ் டிகிரி கற்பிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. மாணவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களை பெற வேண்டும். டிகிரி முடித்துவிட்டு முதுநிலை பட்டம் படிக்க வேண்டும் என்று விரும்பினால், 3 ஆண்டுகள் டிகிரி முடித்தவர்கள் அடுத்து 2 ஆண்டு படித்துவிட்டு முதுநிலை பட்டம் பெறலாம். 4 ஆண்டுகள் ஹானர்ஸ் படித்தவர்கள் ஓராண்டு படித்தாலே முதுநிலை பட்டத்தை பெற முடியும்.
  இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story