பார் கவுன்சில்-மனிதநேய மையம் நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர், மாவட்ட நீதிபதியாக தேர்வு


பார் கவுன்சில்-மனிதநேய மையம் நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர், மாவட்ட நீதிபதியாக தேர்வு
x
தினத்தந்தி 9 Aug 2021 1:26 PM IST (Updated: 9 Aug 2021 1:26 PM IST)
t-max-icont-min-icon

பார் கவுன்சில், மனிதநேய மையம் நடத்திய பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற வக்கீல் பி.ராமச்சந்திரன் மாவட்ட நீதிபதி ஆனார். அவருக்கு பி.எஸ்.அமல்ராஜ், சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தனர்.

மனிதநேய மையம்
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்கும் மனிதநேய மையம், சிவில் சர்வீசஸ் உள்பட மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 3 ஆயிரத்து 850 பேர் மத்திய-மாநில அரசின் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுடன் மனிதநேய மையம் இணைந்து நடத்திய பயிற்சியில் 2012-ம் ஆண்டு 38 வக்கீல்கள், 2015-ம் ஆண்டு 57 வக்கீல்கள், 2018-ம் ஆண்டு 46 வக்கீல்கள், 2013-ம் ஆண்டு 5 வக்கீல்கள், 7 அரசு உதவி குற்றவியல் வக்கீல்கள் என மொத்தம் 153 பேர் வெற்றி பெற்று, தற்போது சிவில் மற்றும் மாவட்ட நீதிபதிகளாக உள்ளனர்.

மாவட்ட நீதிபதிகள் தேர்வு
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு, 32 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி நடத்திய முதல்நிலை தேர்வுக்கு பார் கவுன்சிலுடன் இணைந்து மனிதநேய மையம் பயிற்சி அளித்தது. இந்த தேர்வு முடிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி வெளியானது. இதில் 6 வக்கீல்கள் வெற்றி பெற்றனர். அவர்களில் 5 வக்கீல்களுக்கு பார் கவுன்சில், மனிதநேய மையத்துடன் இணைந்து முதன்மை தேர்வுக்கான பயிற்சியை அளித்தது. முதன்மை தேர்வை சென்னை ஐகோர்ட்டு கடந்த ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் நடத்தியது.

இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த மார்ச் 3-ந் தேதி நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் மற்றும் உளவியல் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

வாழ்த்து
நேர்முக தேர்வு முடிவு மார்ச் 19-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் 2 வக்கீல்கள் மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான பணி ஆணையை பெற்றனர். இதில் பி.ராமச்சந்திரன் என்ற வக்கீல் பார் கவுன்சில், மனிதநேய மையம் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர் ஆவார்.

அவருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story