ஆடி அமாவாசையை முன்னிட்டு தரிசனம் ரத்து: தடையை மீறி வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள்


ஆடி அமாவாசையை முன்னிட்டு தரிசனம் ரத்து: தடையை மீறி வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 9 Aug 2021 3:59 PM IST (Updated: 9 Aug 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தடையை மீறி வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் திரண்டனர். நடை மூடப்பட்டதால் வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

ஆடி அமாவாசை
திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அப்போது முந்தைய நாளிலேயே கோவில் வளாகத்தில் தங்கி, மறுநாள் காலையில் கோவில் வளாகத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், பூந்தமல்லி, காஞ்சீபுரம், வேலூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்து வந்தனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி அமாவாசை தினத்தில் கோவில்களில் சாமி தரிசனத்தை ரத்து செய்தும், நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்யவும் தடை விதித்தும் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதை தொடர்ந்து திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

பக்தர்கள் திரண்டனர்
ஆனாலும் அரசு விதித்த தடையை மீறி நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் எதிரில் சமூக இடைவெளியின்றி கூடினர். அப்போது கோவில் நடை மூடப்பட்டு அவர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் உள்ளே செல்ல முடியாமல் கோவில் வளாகம் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் எதிரே உள்ள காக்களூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாதாள விநாயகர் கோவில் அருகே மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தடையை மீறி தொடர்ந்து பக்தர்கள் அங்கு திரண்டு வந்த வண்ணம் இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்துவதில், போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் நேற்று திருவள்ளூரில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story