அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்


அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்
x
தினத்தந்தி 9 Aug 2021 5:14 PM IST (Updated: 9 Aug 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

நெருப்பெரிச்சல் லட்சுமிநகர் அம்மாள்நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்
நெருப்பெரிச்சல் லட்சுமிநகர் அம்மாள்நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர். 
அடிப்படை வசதிகள் 
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் வினீத்திடம் நெருப்பெரிச்சல் லட்சுமி அம்மாள்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறோம்.  எங்கள் பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை வசதி மற்றும் சாலை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. எனவே அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். 
இவ்வாறு அதில் கூறியிருந்தனர். 
மதுவிற்பனை 
இதுபோல் மக்கள் பாதுகாப்பு அமைப்பு நிறுவன தலைவர் கார்மேகம் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில்:-  வருகிற 15ந் தேதி சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதுபோல் பள்ளி, கல்லூரிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். என்றிருந்தனர். 
அவினாசிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி அவினாசிபாளையத்தில் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோம். கூலி வேலை செய்து வருகிறோம். எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். என்றிருந்தனர். 
20 சதவீத இட ஒதுக்கீடு 
பல்லடம் அவரப்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மகாதேவன் கொடுத்த மனுவில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடையை காலி செய்யுமாறு கூறி வருகிறார்கள். எங்களை வாழ விடுங்கள். இல்லையென்றால் கருணை கொலை செய்துவிடுங்கள். எனவே மீண்டும் அதே பகுதியில் பெட்டிக்கடை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தார். 
பி.சி, எம்.பி.சி., டி.என்.டி. சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பார்த்திபன், நகர செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில்மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை தற்காலிகமாக நிறுத்திவைத்து, பழையபடி 20 சதவீத இட ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும். என்றிருந்தனர். 
எரிவாயு கிடங்கு 
தமிழ்நாடு இளைஞர் கட்சியில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது
 சுதந்திர தினத்தன்று சமூக இடைவெளியுடன் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். என்றிருந்தனர். 
நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது 
கொங்கு முதன்மை சாலை அருகே ரெயில்வே இரும்பு பாதைக்கு எதிரில் உள்ள வெங்கடாசலபதி ஆரம்பப்பள்ளி மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். இந்த பள்ளி அங்கன்வாடியில் இருந்து பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதுபோல் ஈட்டிவீரம்பாளையம் கருக்கங்காட்டுபுதூரில் எரிவாயு கிடங்கு அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர். 
-

  

Next Story