தூத்துக்குடியில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
தூத்துக்குடி:
தேசிய மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உவரியிலும் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
வேலை நிறுத்தம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவை எதிர்த்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.
கிராமப்பகுதிகளில் கருப்பு கொடிகளையும் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 நாட்டுப்படகு மீனவர்களும், 420 விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
மேலும், தருவைகுளம் கடற்கரையில் தூத்துக்குடி மாவட்ட அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பு மற்றும் தருவைக்குளம் சந்தியாகப்பர் நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமும் நடந்தது. அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்க தலைவர் கயாஸ், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர் சங்க செயலாளர் ராபர்ட், விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் சேவியர்வாஸ், தி.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், பரதர் நல தலைமை சங்க தலைவர் ரெனால்டு வி.ராயர், பொதுச் செயலாளர் அந்தோணிசாமி பர்னாந்து மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலெக்டரிடம் மனு
பின்னர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த 'பல்லாயிரம் ஆண்டுகளாக அபாயகரமான தொழில் செய்து வீட்டுக்கும், நாட்டுக்கும் வருவாய் வழங்கி வரும் கடல் வளத்தையும், கடலையும் அபகரிக்க முயற்சிக்கும் தேசிய கடல் மீன்வள மசோதா 2021-ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மீனவ மக்கள் நலன் கருதி இந்த மசோதாவை எதிர்க்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதுதொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் இயற்ற வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story