சர்வதேச பழங்குடியினர் தினவிழா


சர்வதேச பழங்குடியினர் தினவிழா
x
தினத்தந்தி 9 Aug 2021 8:04 PM IST (Updated: 9 Aug 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் சர்வதேச பழங்குடி தின விழா நடந்தது.

தளி
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் சர்வதேச பழங்குடி தின விழா நடந்தது.
பழங்குடி தின விழா
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள பொருப்பாறு, கோடந்தூர், ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மாவடப்பு, குளிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவடப்பு, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் முதுவர், புலையர், மலசர், மற்றும் இரவாளர் போன்ற பிரிவுகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இங்கு நேற்று சர்வதேச பழங்குடியினர் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் மற்றும் உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் தலைமை வகித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
சர்வதேச பழங்குடியினர் தினவிழா 1982ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற  பிரச்சினைகளை மேம்படுத்துவதற்கு பழங்குடி மக்கள் செய்யும் சாதனைகள் மற்றும் பங்களிப்பையும் இந்த நிகழ்வு அங்கீகரிக்கிறது. உலகிலுள்ள ஏறக்குறைய 90 நாடுகளில் 37 கோடி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில் இந்தியாவில் மட்டும்  7.5 கோடி பேர் வசித்து வருகிறார்கள். 
பாரம்பரிய இசைக்கருவி
 திருப்பூர் வனக்கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 17 மலைவாழ் குடியிருப்புகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமிழக வனத்துறை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். வனம் மற்றும் வனஉயிரின பாதுகாப்பில் இவர்களது பங்கினை போற்றும் விதமாக ஆனைமலை புலிகள் காப்பக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் அவர்களின் உத்தரவின்படியும், மாவட்ட வனஅலுவலர் மற்றும் துணை இயக்குனர் திருப்பூர் வனக்கோட்டம் அவர்களின் அறிவுரைப்படியும், கரட்டுபதி மற்றும் திப்பிப்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சர்வதேச பழங்குடியினர் தினவிழா கொண்டாடப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தும் நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். விழாவின் முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.மேலும் சிறப்பாக பணிபுரிந்த பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டது. இதே போன்று ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனச்சரக பகுதியிலும் பழங்குடியினர் தினவிழா கொண்டாடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார். .

---
சர்வதேச பழங்குடியினர் தினவிழாவை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் தலைமையில் மரக்கன்று நடவு செய்யப்பட்ட போது எடுத்த படம்.
----------------


Next Story