பணிக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாய் சரவணன்குமார் கூறினார்.
காரைக்கால், ஆக.
அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாய் சரவணன்குமார் கூறினார்.
புதிய திட்டம்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நபார்டு வங்கி உதவியுடன் திருநள்ளாறு அம்பேத்கர் நகர் சமுதாயகூடத்தில் ‘எனது பேட், எனது உரிமை’ என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. சிவா, காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி தயாளன் வரவேற்றார்.
திட்டத்தை அமைச்சர் சாய் சரவணன்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்களுக்கான திட்டங்கள்
எந்த நாட்டில் பெண் களுக்கு முழு சுதந்திரம் உள்ளதோ, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கப்படு கிறதோ? அந்த நாடு சிறப்பான வளர்ச்சி அடையும். பிரதமர் மோடி ஆட்சியில் இந்த வளர்ச்சி சிறப்புமிக்கதாக உள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் மொத்தம் 30 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது துறையில், பெண்கள் சம்பந்தமான அனைத்து திட்டங்களும், தடையின்றி நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அலுவலகத்தில் ஆய்வு
விழாவை தொடர்ந்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மேம்பாட்டு கழகம், தீயணைப்பு துறை, வட்டார வளர்ச்சித்துறைகளில் அமைச்சர் சாய் சரவணன் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். அப்போது ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதை உயர்அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். தாமதமாக வருவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது, குடிமைப்பொருள் வழங்கல்துறை துணை இயக்குனர் சுபாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story