பழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடக்கம்
பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழனி:
தமிழில் அர்ச்சனை
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நடைமுறை கடந்த 5-ந்தேதி தொடங்கியது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைமுறையை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் செயல்படுத்தப்படும் என்றார்.
இந்த நிலையில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்பட்டு வந்தது. அங்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி நேற்று முதல் பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழில் அர்ச்சனை செய்யும் குருக்களின் பெயர், செல்போன் எண்கள் அடங்கிய தகவல் பலகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மகிழ்ச்சி
கொரோனா பரவலை தடுக்க ஆடி அமாவாசையையொட்டி கடந்த 2 நாட்களாக பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூர் பக்தர்கள் அடிவார பகுதியில் வழிபட்டு சென்றனர். 2 நாட்கள் தடைக்கு பின்னர் நேற்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு தமிழில் அர்ச்சனை செய்யும் முறை வரவேற்கத்தக்கது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story