திருக்கோவிலூர் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகைகள் அபேஸ்


திருக்கோவிலூர் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகைகள் அபேஸ்
x
தினத்தந்தி 9 Aug 2021 9:56 PM IST (Updated: 9 Aug 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகைகளை அபேஸ் செய்த 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

திருக்கோவிலூர்

டிப்-டாப் நபர்கள்

திருக்கோவிலூர் அருகே உள்ள கருணாசெட்டிதாங்கல் கிராமத்தில் வசிப்பவர் வீராசாமி மனைவி வள்ளி(வயது 60). இவர் நேற்று தனது வீட்டில் தனியாக இருந்தபோது 2 டிப்-டாப் உடை அணிந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். 
பின்னர் அவர்கள் வள்ளியிடம் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். இதை உண்மை என்று நம்பிய வள்ளி தான் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ½ பவுன் மோதிரம் ஆகியவற்றை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய மர்மநபர்கள் சுடுதண்ணீர் கேட்டுள்ளனர். 

தலைமறைவு

இதையடுத்து சுடு தண்ணீர் எடுத்து வருவதற்காக வள்ளி வீட்டுக்குள் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 மர்ம நபர்களும் நகைகளுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். 
சுடுதண்ணீருடன் வீட்டுக்கு வெளியே வந்த வள்ளி 2 மர்ம நபர்களையும் காணாமல் அதிர்ச்சி அடைந்து திருடன் திருடன் என கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர். ஆனால் அதற்குள் 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
இதன் பிறகே நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி வந்த 2 மர்ம நபர்களும் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. பறிபோன நகைகளின் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

வலைவீச்சு

பின்னர் இது குறித்து மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் வள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 3 பவுன் நகைகளை அபேஸ் செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் அபேஸ் செய்த சம்பவம் கருணாசெட்டி தாங்கல்  கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2-வது சம்பவம்

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூந்தலூர் கிராமத்தில் நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகைகளை 2 மர்ம நபர்கள் அபேஸ் செய்து சென்றனர். அதேபோன்ற சம்பவம் தற்போது கருணாசெட்டி தாங்கல் கிராமத்திலும் நடந்துள்ளதால் கூந்தலூர் கிராமத்தில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் செட்டிதாங்கல் கிராமத்திலும் கைவரிசை காட்டி சென்றார்களா? என்பது குறித்து  போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story