விண்ணப்பித்து 4 ஆண்டுகளாக காத்திருந்த மூதாட்டி வீட்டிற்கு மின் இணைப்பு
கம்பத்தில் விண்ணப்பித்து 4 ஆண்டுகளாக காத்திருந்த மூதாட்டி வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
கம்பம்:
கம்பம், சுருளிப்பட்டி சாலை தெருவில் வசித்து வருபவர் வீராயி அம்மாள் (வயது 65). இவரது கணவர் வீரபத்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வீராயி அம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 4 வருடங்களாக மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால் அவருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதையடுத்து வீராயி அம்மாள், மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி கம்பம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வந்த கலெக்டர் முரளிதரன், சுருளிப்பட்டி சாலை தெருவில் உள்ள வீராயி அம்மாள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மூதாட்டி வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வருவாய் அலுவலர் செந்தில்குமாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து வருவாய் அலுவலர், கம்பம் மின்வாரிய அதிகாரிகளிடம் மின் இணைப்பு வழங்குமாறு விண்ணப்பம் செய்தார். அதன்பேரில் வீராயி அம்மாள் வீட்டிற்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டது. 4 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு மின் இணைப்பு கிடைத்ததால் அந்த மூதாட்டி மகிழ்ச்சி அடைந்தார். மேலும் கலெக்டரின் இந்த துரித நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story