மயிலாடும்பாறை கூட்டுறவு சங்கத்தில் ரூ.91 லட்சம் மோசடி; முன்னாள் தலைவர் அதிரடி கைது


மயிலாடும்பாறை கூட்டுறவு சங்கத்தில் ரூ.91 லட்சம் மோசடி; முன்னாள் தலைவர் அதிரடி கைது
x
தினத்தந்தி 9 Aug 2021 10:08 PM IST (Updated: 9 Aug 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.91 லட்சம் மோசடி செய்ததாக சங்கத்தின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டார்.

தேனி:
மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.91 லட்சம் மோசடி செய்ததாக சங்கத்தின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டார். 
கூட்டுறவு கடன் சங்கம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு கால கட்டத்தில் இந்த சங்கத்தின் தலைவராக மயிலாடும்பாறையை சேர்ந்த தர்மர் (வயது 65) என்பவர் இருந்தார். செயலாளராக ஜெயமணி இருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது இந்த கடன் சங்கத்தில் விவசாயிகள் பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி நடந்ததாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
ரூ.91 லட்சம் மோசடி
மொத்தம் 403 விவசாயிகள் வாங்கிய கடன் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், போலியான ஆவணங்கள் மூலம் 46 விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ.91 லட்சத்து 27 ஆயிரத்து 775 மோசடி செய்யப்பட்டதும், இதில் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் தர்மர், முன்னாள் செயலாளர் ஜெயமணி மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து மோசடி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில், பெரியகுளம் சரக கூட்டுறவு துணை பதிவாளர் முத்துக்குமார் புகார் செய்தார். இந்த புகார் குறித்து மதுரை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் மேற்பார்வையில், தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜநிலாயினி விசாரணை நடத்தினார்.
முன்னாள் தலைவர் கைது
விசாரணையை தொடர்ந்து, இந்த மோசடி தொடர்பாக மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் ஜெயமணி, உதவி செயலாளர் வைரவன், முன்னாள் தலைவர் தர்மர், ஓய்வு பெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் ஜெயச்சந்திரன், சார்பதிவாளர்கள் ஹரிஹரன் (உசிலம்பட்டி), ராஜசேகர் (மதுரை), மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் முருகன், சிவசுப்பிரமணியன், ரமேஷ், சரக கண்காணிப்பாளர் சேது, கூட்டுறவு இளநிலை ஆடிட்டர் நாகராஜ் ஆகிய 11 பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதில் முன்னாள் தலைவர் தர்மரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மற்ற 10 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 
ஏற்கனவே கடந்த மாதம் கடமலைக்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி நடந்த நிலையில், தற்போது மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்கத்திலும் மோசடி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story