திண்டிவனம் ராமமூர்த்தி உடல் தகனம்
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல் தகனம் செய்யப்பட்டது.
திண்டிவனம்,
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திண்டிவனம் காவேரிப்பாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சேகர், நகர பொருளாளர் கண்ணன், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், முருகன், சின்னதுரை மற்றும் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், மாநில இளைஞரணி அமைப்பாளர் தமிழ் வேங்கை, பேராசிரியர் பிரபா கல்விமணி, பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும், கடலூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.சி.சம்பத், திண்டிவனம் எம்.எல்.ஏ. அர்ஜுனன், நகர செயலாளர் பா.தீனதயாளன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கே.சேகர் உள்பட பலர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் நேற்று மதியம் ஒரு மணி அளவில் திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டது. திண்டிவனம் மேம்பாலம், நேரு வீதி, தீர்த்தக்குளம் பகுதி வழியாக நகராட்சி தகன மேடைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்ததும் ராமமூர்த்தியின் உடலுக்கு அவரது மகன் டாக்டர் கண்ணையன் தீ மூட்டினார். அப்போது ராமமூர்த்தியின் தம்பி சம்பத்குமார் உடனிருந்தார். பின்னர் ராமமூர்த்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story