பாதியில் நிற்கும் வீடு கட்டுமான பணிகள்


பாதியில் நிற்கும் வீடு கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:47 PM IST (Updated: 9 Aug 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

பாதியில் நிற்கும் வீடு கட்டுமான பணிகள்

பொள்ளாச்சி

ஆனைமலை பகுதியில் போதிய நிதி ஒதுக்காததால் மலைவாழ் மக்களின் வீடு கட்டுமான பணிகள் பாதியில் நிற்கின்றன. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு உள்ளது.

மலைவாழ் மக்கள்

ஆனைமலையை அடுத்த ஓடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுள்ளிமேட்டுபதி, பாறைபதி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக மழைக்காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். 

இதை தொடர்ந்து பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுள்ளிமேட்டு பதியில் 41 பேருக்கும், பாறைபதியில் 15 பேருக்கும் வீடுகள் கட்டுவதற்கு ஆணை பெறப்பட்டது. 

இதேபோன்று வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் தம்மம்பதி யில் 113 பேருக்கும், குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் அண்ணா நகரில் 100 வீடுகளும் கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆணை வழங்கப்பட்டது.

பாதியில் நிற்கிறது 

இதை தொடர்ந்து மலைவாழ் மக்கள் வீடு கட்டும் பணியை தொடங்கினார்கள். இதில் சிலர் அடித்தளமும், சிலர் சுவர் வரையும் கட்டி உள்ளனர். இந்த பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.45 ஆயிரம் ஒதுக்க வேண்டும். ஆனால் இதுவரைக்கும் எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை.

இதனால் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியாததால் அப்படியே போட்டு விட்டனர். இதனால் அந்த பணிகள் பாதியில் நிற்கிறது. தற்போது அந்த இடங்களில் புதர்கள் முளைத்து, பாம்பு உள்ளிட்ட விஷசந்துகளின் புகலிடமாக மாறி வருகிறது. 

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

நிதி ஒதுக்கவில்லை

வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கும் போது போதுமான நிதியை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை நிதி ஒதுக்கவில்லை. நிதியை ஒதுக்கக்கோரி அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. 

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது குடிசையில் வசித்து நாங்கள் கான்கீரிட் வீடுகளில் வசிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story