சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ரூ 19 ஆயிரம் அபராதம்


சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ரூ 19 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:49 PM IST (Updated: 9 Aug 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ரூ 19 ஆயிரம் அபராதம்

பொள்ளாச்சி

அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால் சிவகார்த்தி கேயன் படக்குழுவினருக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டதுடன், இயக்குனர் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

படப்பிடிப்பு 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தை திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். இந்த நிலையில்  ஆனைமலை உப்பாற்று பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

பின்னர் முக்கோணத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்றன. அப்போது பொதுமக்கள், குழந்தைகள் கூட்டமாக நிற்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். 

பொதுமக்கள் திரண்டனர் 

அந்தப்பகுதியில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூட்டம் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

அதுபோன்று கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பாதியில் நிறுத்தம் 

இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், தாசில்தார் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் கொரோனா பரவும் வகையில் கூட்டமாக நின்றதால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தினர். இதை தொடர்ந்து அங்கு நின்ற பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

ரூ.19 ஆயிரம் அபராதம் 

இதை தொடர்ந்து முகக்கவசம் அணியாமல், சமூக இடை வெளியை கடைப்பிடிக்காததற்கு உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறியதாக படக்குழுவினருக்கு வருவாய்த்துறையினர் ரூ.19 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர். 

மேலும் இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், கொரோனா நோய் தொற்று பரவும் வகையில் கூட்டம் கூடுதல், அரசின் தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்பட படக்குழுவினர் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனுமதி பெறவில்லை 

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, படப்படிப்பை நடத்த அனுமதி பெறவில்லை. கொரோனா பரவும் காலத்தில் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி, தொற்று பரவும் வகையில் செயல்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர். 


Next Story