பஸ் கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


பஸ் கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 9 Aug 2021 11:20 PM IST (Updated: 9 Aug 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர்
இழப்பீடு
கரூர் மாவட்ட அனைத்து பஸ் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள பஸ்பாடி கட்டும் நிறுவனங்களில் பஸ் கட்டுமான தொழிலாளர்களாக நாங்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். மேற்படி பணியானது தினக்கூலி அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எங்களது தொழில் முற்றிலுமாக நலிவடைந்துள்ளது. எனவே எங்களையும், எங்களது 200 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காத்து, எங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கியும், எங்களது பஸ் கட்டுமான தொழில் மீண்டும் தொடங்க வழிவகை செய்ய வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாய்க்கால் வெட்டும் பணி
குளித்தலை தாலுகா தாளியாம்பட்டி, அய்யநெரி ஊர ்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- அய்யநெரி கிராமத்தில் காவிரி-குண்டாறு வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி ஏற்கனவே வாய்க்காலுக்கு, குடியிருப்பு வீடுகளுக்கு தென்புறத்தில் உள்ள காலி இடங்கள் வழியாக நிலம் சர்வே செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வீடுகள் பாதிக்காத நிலையில் இருந்தது. கடந்த 6-ந் தேதி வாய்க்கால் அமைக்கும் பணிக்காக அளவீடு செய்தவர்கள் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கூறினார்கள். எங்களுக்கு மேற்படி வீட்டை தவிர வேறு இடம் இல்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே சர்வே செய்தப்படி குடியிருப்பை ஒட்டி தென்புறத்தில் காலியாக உள்ள காட்டு நிலங்கள் வழியாக வாய்க்கால் வெட்டும் பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
எலும்பு முறிவு நோய்
கரூர் ராயனூர், அசோக் நகரை சேர்ந்த சிவகுமார் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் சஞ்சய் (வயது 11). ராயனூரில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். எனது மகனுக்கு பிறந்ததிலிருந்தே எலும்பு முறிவு நோய் உள்ளதால் இதுவரை சுமார் 37 முறை கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பல லட்சங்கள் கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருந்து வருகிறான். இந்தநிலையில் கொரோனா நோய் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போதிய பண வசதி இல்லாததால் எனது மகனுக்கு எந்தவித சிகிச்சையும் செய்யவில்லை. ஆகவே மாவட்ட கலெக்டர் எனது மகனின் எதிர்காலத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயிர் கடன்
கடவூர் தாலுகா தேக்கமலை கோவில்பட்டியை சேர்ந்த பழனிசாமி மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிர்க்கடன்களை வழங்காமல், நிலம் இல்லாதவர்கள், அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு பயிர்க்கடன்களை வழங்கி அதனை தள்ளுபடி செய்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
புஞ்சைகாளகுறிச்சி கிராமம், காசிபாளையம் சித்ரா என்பவர் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு, ஒருவர் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு எங்களுக்கு பாதையை கிடைக்க செய்ய வேண்டும் என கன்றுக்குட்டியுடன் வந்து மனு அளித்தார்.
கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் ேநற்று அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story