ரூ.85 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் -டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
கலவை அருகே வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த ரூ.85 லட்சம் மதிப்புள்ள 17,395 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ராய்ரத்தோர் தெரிவித்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை)
கலவை அருகே வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த ரூ.85 லட்சம் மதிப்புள்ள 17,395 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ராய்ரத்தோர் தெரிவித்தார்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எரி சாராயம் பறிமுதல்
தமிழ்நாடு முழுவதும் வாகன தணிக்கை செய்து மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க உத்தரவிட்டு இருந்தேன். அதன்பேரில் கடந்த 5-ந்தேதி நள்ளிரவு, ராணிப்பேட்டை மாவட்டம், கலவை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, மணி, குமரன் உள்ளிட்ட போலீசார் கலவை- செய்யாறு சாலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கலவையிலிருந்து செய்யார் நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, டிரைவரும் மற்றும் அதில் இருந்த ஒருவரும், வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வேனை சோதனை செய்த போது, வேனில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 கேன்களில் மொத்தம் 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.85 லட்சம் மதிப்பு
ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மேற்பார்வையில், சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் தலைமையில் மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம், விண்ண மங்கலத்தைச் சேர்ந்த சம்பத் (வயது 32) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் கலவை அருகே உள்ள செய்யாத்துவண்ணம், பத்மாவதி நகர் என்ற இடத்தில் வெளிமாநிலத்தில் இருந்து 497 கேன்களில் 17,395 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.77 லட்சமாகும். பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயம், வாகனம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.
2 பேர் கைது
எரிசாராயம் கடத்திய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சம்பத் (32), ராணிப்பேட்டை மாவட்டம் செய்யாத்துவண்ணம் மல்லிகாபுரத்தை சேர்ந்த வினோத் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 58 பேருக்கு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
Related Tags :
Next Story