பேரணாம்பட்டில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.6¾ லட்சம் நகை, பணம்திருட்டு
பேரணாம்பட்டில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.6¾ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு
ஊருக்கு சென்றனர்
பேரணாம்பட்டு டவுன் கெங்கையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் துபாய் லட்சுமி (வயது 65). இவரது வீட்டில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சங்கரலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த முத்தம்மா (62) என்பவர் வாடகை இருந்து, சாப்பாடு மெஸ் நடத்தி வருகிறார். முத்தம்மாவின் சொந்த கிராமமான சங்கரலிங்காபுரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 2-ந் தேதியன்று துபாய் லட்சுமி, முத்தம்மா குடும்பத்தினருடன் சென்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் துபாய் லட்சுமியின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் துபாய் லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக துபாய் லட்சுமி, முத்தம்மா குடும்பத்தினர் வந்து பார்த்தபோது துபாய் லட்சுமி வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.
ரூ.6¾ லட்சம் நகை, பணம் திருட்டு
பீரோக்களில் வைத்திருந்த 5 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ், 2 ஜோடி கம்மல்கள், மோதிரம் மற்றும் வெள்ளி டம்ளர் 2, வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு, பணம் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. அதேபோன்று முத்தம்மா வீட்டில் பீரோவில் இருந்த 7 பவுன் செயின், காது வளையம், வெள்ளி கொலுசு, பணம் ரூ.40 ஆயிரம் ஆகியனவை திருட்டு போயிருந்தது. ஊருக்கு சென்றிருந்த நேரத்தில் மரர்ம நபர்கள் வீட்டின்பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர். 2 வீடுகளிலும் திருட்டுப்போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.6¾ லட்சம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் துபாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்ரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் உதவி ஆய்வாளர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story