ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசு
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தாய்ப்பால் வார விழாவையொட்டி தேர்வு செய்யப்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுதலின் அவசியம் குறித்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தையின் முதல் 1,000 நாட்கள் வாழ்நாள் முழுமைக்கான ஆரோக்கியம் குறித்தும், சீம்பாலில் நன்மைகள் குறித்தும், கொரோனா தொற்று காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. மேலும் இங்கு பாலூட்டும் தாய்மார்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஊட்டச்சத்து கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்து தெரிந்து கொண்டு அவைகளை கடைப்பிடித்து நல்ல ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சியை உறுதி செய்திட வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story