கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு


கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 10 Aug 2021 12:52 AM IST (Updated: 10 Aug 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நர்சுகள் மனு கொடுத்தனர்.

நெல்லை:
அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நர்சுகள் மனு ெகாடுத்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் பலர் அங்குள்ள பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்.
நெல்லை அருகே உள்ள சங்கர்நகர் சத்திரம்குடியிருப்பு அருணாசலநகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள கழிவுநீர் வடிகால் ஓடை தனியார் நிலத்தின் அருகில் வருவதால் அந்த நபர் அதனை அடைத்து விட்டார். இதனால் தற்போது ஓடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சில வீடுகளுக்குள் கழிவுநீர் சென்று விடுகிறது.
மேலும் அந்த கழிவுநீரால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் தொற்றும் அபாயமும் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த தெருவிற்கு நிரந்தர கழிவுநீர் வடிகால் கட்டித்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நர்சுகள் மனு

ராதாபுரம் அருகே உள்ள யாக்கோபுரம் பிள்ளையார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மகளிர் சுய உதவி குழுவில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த தலைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
கொரோனா காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்த தற்காலிக நர்சுகள், பல்நோக்கு பணியாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில், நாங்கள் கொரோனா தொற்றுக்காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து வந்தோம். தற்போது எங்களை பணிநீக்கம் செய்து விட்டார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். எங்களது பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் முத்துவளவன் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் கொடுத்த மனுவில், வள்ளியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2020-ம் ஆண்டு நடந்த மோசடி புகார் குறித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவண உரிமம் பெறாத புரோக்கர்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் செல்வதை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story