டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 10 Aug 2021 12:54 AM IST (Updated: 10 Aug 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக மணிகண்டன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல், மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் நேற்று கடையை திறக்க அவர்கள் வந்தனர். 
அப்போது கடையின் பின்பக்க சுவரில் ஒரு நபர் உள்ளே சென்று வரும் அளவிற்கு துளை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள்  கடையை திறந்து உள்ளே சென்றுபார்த்த போது, அங்கிருந்த 450 மதுபாட்டில்களை காணவில்லை.

கண்காணிப்பு கேமரா

 அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.65 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
விசாரணையில், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். 
பின்னர் அவர்கள் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு அதன் வழியாக கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

பரபரப்பு

 தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். 
இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story