குடிநீர் பணிக்கு டெண்டர் நடந்த இடத்தில் இருதரப்பினர் மோதல்; ஒருவர் காயம்


குடிநீர் பணிக்கு டெண்டர் நடந்த இடத்தில் இருதரப்பினர் மோதல்; ஒருவர் காயம்
x
தினத்தந்தி 10 Aug 2021 1:06 AM IST (Updated: 10 Aug 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் குடிநீர் பணிகளுக்கு டெண்டர் நடைபெற்ற இடத்தில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இதில் ஒருவர் காயம் அடைந்தார்.

சிவகங்கை,

சிவகங்கையில் குடிநீர் பணிகளுக்கு டெண்டர் நடைபெற்ற இடத்தில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இதில் ஒருவர் காயம் அடைந்தார்.

இருதரப்பினர் மோதல்

சிவகங்கையில் தொண்டி ரோட்டில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் தொடர்பாக 26 பணிகளுக்கான டெண்டர் நேற்று நடைபெற்றது. டெண்டர் முடிந்த பின்னர் அலுவலகத்தின் கீழே இருதரப்பினர் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் அங்கு கிடந்த பிளாஸ்டிக் இருக்கையால் அடித்ததில் டெண்டர் எடுக்க வந்திருந்த தி.மு.க.ைவ சேர்ந்த கோவானூரை சேர்ந்த சோமன்(வயது 58) என்பவருக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட, சொட்ட அவர் நின்றிருந்தார்.

போலீசார் விரைந்தனர்

இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி வெளியேற்றினர். பின்னர் காயம் அடைந்த சோமனை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அய்ணான் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கிராம குடிநீர் திட்டத்தில் 21 பணிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 6 பணிகளுக்கும் சேர்த்து 27 பணிகளுக்கு ரூ.3½ கோடி மதிப்பிலும், இதே போல் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தின் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ரூ.3½ கோடி மதிப்பிலும் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர்கள் அனைத்தும் முடிந்து விட்டது. அதன் பின்னர் அலுவலகத்திற்கு வெளியே தகராறு நடந்துள்ளது. இந்த டெண்டருக்கும் தகராறுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
 இவ்வாறு அவர் கூறினார்.

தபால்காரர் மீது தாக்குதல்

இதற்கிடையே டெண்டர் நடந்த நிர்வாக பொறியாளர் அலுவலகத்திற்கு தபால் கொடுக்க சென்ற நடராஜன் (35) என்ற தபால்காரரை கூட்டத்தில் இருந்த சிலர் தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story