குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
கைதான கணவரை விடுவிக்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண், தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து அவரது குழந்தை மீதும், தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரது கையில் இருந்த கேனை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், குப்பங்குளத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்ரம் மனைவி கலைச்செல்வி (வயது 24), அவரது குழந்தை ரட்சிகா (2) என்பது தெரியவந்தது.
பரபரப்பு
தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த 16.2.2021 அன்று சுப்புராயலு நகரை சேர்ந்த வீரா என்கிற வீராங்கன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன், போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்பில்லாத விக்கி, அவரது சகோதரர் ராக்கி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதனால் அவர்களை விடுவிக்க கோரி, கலைச்செல்வி தனது குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன் பேரில் கலைச்செல்வி மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கலைச்செல்வி மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story