விவசாய நிலத்தை உழுதபோது புதைந்திருந்த 3 சிலைகள் மீட்பு


விவசாய நிலத்தை உழுதபோது புதைந்திருந்த 3 சிலைகள் மீட்பு
x
தினத்தந்தி 10 Aug 2021 1:22 AM IST (Updated: 10 Aug 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே விவசாய நிலத்தை உழுதபோது அதில் புதைந்திருந்த 3 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. ஆனால் அந்த சிலைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரியாபட்டி
திருச்சுழி அருகே விவசாய நிலத்தை உழுதபோது அதில் புதைந்திருந்த 3 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. ஆனால் அந்த சிலைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி சிலைகள்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மிதலைகுளம் புளியங்குளத்தை சேர்ந்தவர் சாமி கிழவன். இவர் கடந்த சில தினங்களாக தனது நிலத்தை எந்திரம் மூலம் உழுது சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது நிலத்தின் அடியில் கற்சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் அந்த நிலத்தில் புதைந்த சிலைகளை தோண்டி எடுத்து பார்த்தனர். அப்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகிய 3 சிலைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சிலைகளுக்கு மாலை அணிவித்து வழிபட தொடங்கினர். 
இதுகுறித்து தகவல் கிடைத்ததன் பேரில் திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், விருதுநகர் அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நிதிகுமார், ராம்நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
போராட்டம்
பின்பு சிலைகளை மீட்டு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முயன்ற போது கிராம மக்கள் சிலைகளை தர மறுத்து போராட்டம் நடத்தினர். சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாமி வந்து அருள்வாக்கு கூறியபடி ஆடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று மீண்டும் கிராமத்தில் வைத்து வழிபட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து சாமி சிலைகளை திருச்சுழி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் அனுமதித்தனர்.
அருங்காட்சி யகத்தில் சிலைகள்
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிலைகளில் 2½ அடி உயரமுள்ள பெருமாள் சிலை மற்றும் தலா 1½ அடி உயரமுள்ள ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் ஆகும். இந்த சாமி சிலைகள் கி.பி.13 அல்லது 14-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 1878-ம் வருடத்திய இந்திய புதைபொருள் சட்டத்தின்படி சிலைகள் மீட்கப்பட்டு அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் தெரிவித்தார்.

Next Story