கொரோனா பரவலை தடுக்க பெங்களூருவில் வருகிற 15-ந் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் அமல் - மந்திரி ஆர்.அசோக் பேட்டி
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க வருகிற 15-ந் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பெங்களூரு:
வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கட்டாயம் பரிசோதனை
பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பொம்மனஹள்ளி, மகாதேவபுரா மண்டலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. பெங்களூருவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இதற்காக 108 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்களுக்கு தேவையான வாகன வசதியும் செய்து கொடுக்கப்படும். நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா பரிசோதனை முடிவுகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். பெங்களூருவில் கடந்த 40 நாட்களாக தினசரி சராசரியாக 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளின் எண்ணிக்கை 150 ஆக உள்ளன. நகரில் இதுவரை 60 லட்சத்து 54 ஆயிரத்து 264 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 17 லட்சத்து 7 ஆயிரத்து 679 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது
ஒரு பகுதியில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் இருக்கும் தளங்கள் மட்டும் சீல் வைக்கப்பட்டு மூடப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி மார்ஷல்களை அனுமதிக்க வேண்டும். அவர்களை அனுமதிக்க மறுத்தால், அந்த குடியிருப்பு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. அதன் பிறகு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். முன்பு போல் கொரோனா பரவல் அதிகரிக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். அடுத்தடுத்து திருவிழாக்கள் வருகின்றன. அதனால் கோவில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மார்க்கெட்டுகளை மூடுவதில் சிக்கல் உள்ளது. மார்க்கெட்டுகளை மூடினால் அது விவசாயிகளை பாதிக்கிறது. நிபுணர்களின் ஆலோசனைப்படி கர்நாடகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
Related Tags :
Next Story