விவசாய பணிக்காக குளத்துக்கரையில் தார் சாலை அமைக்க கோரிக்கை- கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
கடையநல்லூரில் விவசாய பணிக்காக குளத்துக்கரையில் தார் சாலை அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு உட்பட்ட நல்லக்குட்டியார்குளம் 42 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 200 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அதில் நெல், வாழை, தென்னை, காய்கறிகள் போன்றவை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விளைநிலங்களுக்கு சென்றுவர குறுகலான குளக்கரையை தான் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் சேறும் சகதியுமாக குண்டும் குழியுமாக மாறி விடும். இதனால் விவசாய நிலங்களுக்கும், விளைபொருட்களை வீடுகளுக்கு எடுத்து வர முடியாத நிலை உள்ளது.
இதுதொடர்பாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவை அப்பகுதி விவசாயிகள் நேரில் சந்தித்தனர். குளத்துக்கரையை விரிவுபடுத்தி தார் சாலை அமைத்து, குளத்தின் உபரி நீர் செல்லும் மதகையும் சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அந்த குளத்தை நேரில் பார்வையிட்டு குளக்கரையில் தடுப்பு சுவர் அமைத்து, மதகை சீர்செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தொலைபேசியில் பேசினார். உடனடியாக சரி செய்து கொடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார். நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.கே.முருகன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story