சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்; மந்திரி அரகா ஞானேந்திரா பேட்டி


சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்; மந்திரி அரகா ஞானேந்திரா பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2021 1:55 AM IST (Updated: 10 Aug 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் துறை நவீனமயமாக்கப்படும் என்றும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் மந்திரி அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மந்திரி ஆலோசனை

  கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் போலீஸ் மந்திரியாக அரகா ஞானேந்திரா பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து, நேற்று மந்திரி அரகா ஞானேந்திரா விகாச சவுதாவில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட், பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  அப்போது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் மந்திரி அரகா ஞானேந்திரா கேட்டு அறிந்து கொண்டார். மேலும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும், அந்த விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்படக்கூடாது என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் மந்திரி அரகா ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்குக்கு முக்கியத்துவம்

  போலீஸ் மந்திரியாக பதவி ஏற்ற பின்பு முதன் முறையாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கர்நாடக போலீசார் மற்ற மாநில போலீசாருக்கு முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்திருந்தனர்.

  சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும். மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்.

  போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் மக்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது. புகாரை வாங்க மறுக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு போலீசாரின் கடமையாகும். அதை உணர்ந்து செயல்படும்படி உத்தரவிட்டுள்ளேன். போலீஸ் துறை நவீனமயமாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story