காரைக்குடி,
காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் ஏ.ஐ.டி.யூ.சி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வங்கி, இன்சூரன்ஸ், ெரயில்வே, விமான துறைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். எல்.பி.எப். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. நகர ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன்,எல்.பி.எப். மாவட்ட நிர்வாகி மலையரசன், சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்க மண்டல தலைவர் மணவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காரணத்தால் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார், பி.எல்.ராமச்சந்திரன், மலையரசன் உள்பட 12 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.