களத்துமேட்டில் விளையாடியபோது பூச்சி கடித்து சிறுவன் சாவு
களத்துமேட்டில் விளையாடியபோது பூச்சி கடித்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு நிதிஷ், தேவஸ்ரீ, அரிஷ், ஹரிஷ்(6) என 4 குழந்தைகள். சம்பவத்தன்று ரமேஷ், மாரியம்மாள் ஆகியோர் அவர்களது வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது, அருகில் உள்ள களத்துமேட்டில் அவர்களது குழந்தைகள் 4 பேரும் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஹரிசை ஏதோ பூச்சி கடித்து விட்டதாக, மற்ற குழந்தைகள் கூச்சலிட்டனர். இதையடுத்து ரமேசும், மாரியம்மாளும் ஹரிசை மீட்டு உதயநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து, அங்கிருந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிசை பரிசோதித்த டாக்டர்கள், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story