கோவில்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன்னுரிமை; மந்திரி சசிகலா ஜோலே பேட்டி


கோவில்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன்னுரிமை; மந்திரி சசிகலா ஜோலே பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2021 2:15 AM IST (Updated: 10 Aug 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்னுரிமை அளிப்பேன் என்று மந்திரி சசிகலா ஜோலே கூறினார்.

பெங்களூரு:

 அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக பக்தர்கள்

  இந்துமத கலாசாரத்தின்படி ஸ்ரவன மாதத்தின் முதல் வாரத்தின் திங்கட்கிழமை புண்ணியமான நாள் ஆகும். இந்த நாளில் நான் கோவிலில் பூஜை செய்து எனது துறை பணிகளை தொடங்கியுள்ளேன். கொரோனா வைரஸ் விலகி மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். மேலும் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்படும் வட கர்நாடக மக்களை அதில் இருந்து காக்க வேண்டும் என்றும் வேண்டினேன்.

  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்னுரிமை அளிப்பேன். கோவில் வளாகங்களில் குடிநீர், கழிவறை, ஓய்வறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பிரபலமான கோவில்களுக்கு செல்லும் கர்நாடக பக்தர்கள் தங்க விடுதிகள் கட்டப்படும்.

சோதனை சாவடிகள்

  கொரோனா 3-வது அலையை தடுக்கும் நோக்கத்தில் விஜயாப்புராவில் உள்ள மராட்டிய மாநில எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த சோதனை சாவடிகளுக்கு கூடுதலாக போலீசார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
  இவ்வாறு சசிகலா ஜோலே கூறினார்.

Next Story