தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம்


தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 10 Aug 2021 2:33 AM IST (Updated: 10 Aug 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடைபெற்ற தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடைபெற்ற தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
வாகன பிரசாரம்
குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்க விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தையின் ஆரோக்கியம்
பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. குழந்தையின் சிறப்பான ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக, பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று உலக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பான கூடுதல் உணவு கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தாய்ப்பால் மற்றும் கூடுதல் உணவு முறையாக பெற்ற குழந்தைகள் உடல் ஊனமடையாமலும், மெலிவுத்தன்மை, எடைக்குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளரும்.
துண்டு பிரசுரம் 
மேலும் தாய்ப்பால் குறித்து துண்டு பிரசுரங்களும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசார வாகனமானது மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஆசாரிப்பள்ளம், வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையம், சுசீந்திரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும்.
நிறைவாக கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களால் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்த கண்காட்சி மற்றும் கோலங்களையும் அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஜாஸ்மின் பிரமிளா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரி சரோஜினி, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மகேஷ், சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story