தாதகாப்பட்டியில் பாதாள சாக்கடை திட்டப்பணி 3 நாட்களில் முடிக்கப்படும்-ஆணையாளர் கிறிஸ்துராஜ் தகவல்
தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி இன்னும் 3 நாட்களில் முடிக்கப்படும் என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறினார்.
சேலம்:
தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி இன்னும் 3 நாட்களில் முடிக்கப்படும் என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறினார்.
பாதாள சாக்கடை திட்டப்பணி
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட தாதகாப்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெற்று வருகிறது. பணியை விரைந்து முடிக்க கோரி அந்த பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெற்று வருகின்றன. நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மெயின் ரோட்டில் 1,100 மீட்டர் நீளத்திற்கு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது 1,090 மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்து உள்ளன.
கடினமான பாறைகள்
இதே போன்று தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்த இடத்தில் கடினமான பாறைகள் உள்ளன. அதை எந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையொட்டி தற்போது ஆய்வு நடத்தப்பட்டது. எனவே பொதுமக்கள் கோரிக்கை படி தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் இன்னும் 3 நாட்களில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாநகர என்ஜினீயர் அசோகன், உதவி என்ஜினீயர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story