ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு; கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 29). இவர் மீன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ராமசந்திரன் தனது 2 மகன்களுடன் நேற்று வந்தார்.
அப்போது அவர் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொள்ள முயன்றார். அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த பத்திரிகையாளர்கள் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர் அங்கேயே தரையில் உட்கார்ந்து கொண்டு, கலெக்டரை சந்தித்த பிறகுதான் செல்வேன் என்று தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ராமசந்திரன் கூறியதாவது:-
கள்ளக்காதலனுடன்...
நான் மீன் கடையில் வேலை செய்து வருகிறேன். எலக்ட்ரீஷியன் ஒருவருடன் எனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. என்னையும், எனது 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு அவள் தனது கள்ளக்காதலனுடன் சென்று விட்டாள். என்னிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை அவர்கள் எடுத்து சென்று விட்டார்கள். எனது மனைவியுடன் சென்றவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
எனது குழந்தைகளுக்கு தாய் வேண்டும். இதற்காக மனைவியை மீட்டுத்தரக்கோரி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திலும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தேன். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றும் நடவடிக்கை இல்லை. மேலும், எனது மனைவியும், அந்த நபரும் ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வருகிறார்கள். எனவே கலெக்டரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்கொலை மிரட்டல்
அதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்தனர். அதன்பிறகு அங்கிருந்து ராமசந்திரன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர், “எனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், எனது சாவுக்கு காரணம் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வேன், ’’ என்றார். அதன்பிறகு அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story