கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி விஷம் குடிக்க முயன்ற பெண்


கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி விஷம் குடிக்க முயன்ற பெண்
x
தினத்தந்தி 10 Aug 2021 7:47 AM IST (Updated: 10 Aug 2021 8:07 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை திறக்க வலியுறுத்தி பெண் ஒருவர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக கலெக்டரிடம் நேரில் மனு கொடுக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் மனுக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாகனங்களையும், பொதுமக்களையும் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். 

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் ஒருவர் கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவிலை திறக்க வலியுறுத்தி திடீரென விஷம் (சாணி பவுடர்) குடிக்க முயன்றார். இதனைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி, கையில் இருந்த விஷத்தை பிடுங்கினர்.

அப்போது அந்தப் பெண் கோவிலை திறக்க வேண்டும் என்றும் இல்லையெனில் உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் ஆவேசமடைந்தார். மேலும் அந்த பெண் போலீசாரின் காலில் விழுந்து கோவிலை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் விஜயா என்பதும், பூ மார்க்கெட்டில் பூ விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்கக்கோரி இந்து மக்கள் புரட்சி படை அமைப்பினர் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அப்போது அவர்கள் சிவபெருமான் வேடமணிந்து விநாயகர் சிலையை ஏந்தியவாறு வந்தனர்.

திராவிடர் தமிழர் கட்சி சார்பில் அளித்த மனுவில், தொண்டாமுத்தூர் அருகில் உள்ள தேவராயபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க தலைவர் தங்கவேலு, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் செல்வம் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில், சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல மாநில பண்டாரகுல முன்னேற்ற நல அறக்கட்டளை மற்றும் எம்.பி.சி., டி.என்.டி. சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தமிழகத்தில் தனிப்பட்ட சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story