சேந்தமங்கலம் அருகே பயங்கரம்: முன்னாள் டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை - கரும்பு ஆலை உரிமையாளர் கைது


சேந்தமங்கலம் அருகே பயங்கரம்: முன்னாள் டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை - கரும்பு ஆலை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2021 8:12 AM IST (Updated: 10 Aug 2021 8:26 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே முன்னாள் டாஸ்மாக் ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கரும்பு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளத்தில் கரும்பு சாறு எடுக்கும் ஆலையை நடத்தி வருபவர் செந்தில்குமார் (வயது 48). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 லாரிகளை சொந்தமாக வைத்திருந்தார். அந்த லாரிகளுக்கு பெட்ரோல் போடுவது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மலைவேப்பன்குட்டையை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொடுத்த பணத்தை சிவக்குமார் அடிக்கடி திருப்பி கேட்டு வந்ததாக தெரிகிறது. 

இதனால் செந்தில்குமாருக்கும், சிவக்குமாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சிவக்குமார் தனது நண்பரான மலைவேப்பன்குட்டை புதுகாலனியை சேர்ந்த முன்னாள் டாஸ்மாக் ஊழியர் முருகேசன் (43) என்பவரை சந்தித்து பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளராக நடித்து எனக்கு வர வேண்டிய கடன் தொகையை செந்தில்குமாரிடம் இருந்து வசூலித்து கொடுக்குமாறு கூறினார். அதற்கு முருகேசனும் ஒத்துக்கொண்டார். 

இதையடுத்து 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள கொல்லிமலை சாலைக்கு வந்தனர். அதில் அங்கு வந்த செந்தில்குமாரிடம் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளராக நடித்து முருகேசன் பணத்தை கேட்டதாக தெரிகிறது. அப்போது 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேசனை சரமாரியாக குத்தினார். இதைப் பார்த்த சிவக்குமார் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த முருகேசன் தடுமாறி எழுந்து அங்கிருந்து சிறிது தூரம் தப்பி ஓடினார்.  பின்னர் தனது மகன் லோகேஷ் சர்மாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு துத்திக்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் தன்னை கத்தியால் குத்திவிட்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த லோகேஷ் சர்மா பதறியடித்து கொண்டு வந்து குற்றுயிராய் கிடந்த தந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து லோகேஷ் சர்மா சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரும்பு ஆலை உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் சிவக்குமாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் நாமக்கல்லில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். 

கொலையான முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தகராறில் முன்னாள் டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story