ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டுதிருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை - கலெக்டர் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலைக்கோவிலில் அமைந்துள்ள முருகன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்பக் காவடிகள் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதியும் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் முருகன் கோவில் மற்றும் உபகோவில்களில் பக்தர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) நாளை(புதன்கிழமை) சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலிலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்கும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் செவ்வாய்க்கிழமை நாட்களில் பக்தர்கள் தரிசனம் அனுமதி இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், திருவள்ளூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தமிழக அரசின் 144 தடை உத்தரவை மீறி முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி தீமிதி திருவிழாவை நடத்தியதாக கூறப்படுகிறது.இது தொடர்ந்து அனுமதியின்றி தீ மிதி திருவிழா நடத்தியதாக கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேர் மீது செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story