வங்கியில் இருந்து பேசுவதுபோல் நடித்து மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி


வங்கியில் இருந்து பேசுவதுபோல் நடித்து மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி
x
தினத்தந்தி 10 Aug 2021 1:13 PM IST (Updated: 10 Aug 2021 1:13 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வங்கியில் இருந்து பேசுவதுபோல் நடித்து மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடியில் ஈடுப்பட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை மதுரை சாமி மடம் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி சிங் (வயது 53). இவர், மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவன தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

வங்கியில் இருந்து பேசுவதாக இவரது செல்போனில் தொடர்பு கொண்ட ஆசாமி, வங்கி கணக்கில் கூடுதலாக தகவல் சேகரிக்க இருப்பதாக கூறி, வங்கி கணக்கு விவரங்களையும், அவரது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் கேட்டார். இதை உண்மை என நம்பிய பாலாஜி சிங், அந்த நபர் கேட்ட விவரங்களை தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 4 தவணையாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு பாலாஜி சிங் அதிர்ச்சி அடைந்தார். பின்னர்தான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்தது தெரிந்தது. இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story