தேசிய கடல்சார் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை மெரினாவில் மீனவர்கள் பேரணி
தேசிய கடல்சார் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை மெரினாவில் மீனவர்கள் பேரணியாக சென்றனர்.
சென்னை,
மத்திய அரசின் 2021 தேசிய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இந்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு நாகை மீனவர் பேரமைப்பு சார்பில் மெரினா கடற்கரையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பட்டினப்பாக்கத்துக்கு நேற்று காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து குவியத்தொடங்கினர்.
பின்னர் பட்டினப்பாக்கத்தில் இருந்து அவர்கள் கலங்கரை விளக்கம் வரையிலும் மீனவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். கடல்சார் மீன்வள மசோதாவை அமல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் பதாகைகளும் ஏந்திச்சென்றனர். மீனவர் சங்க பிரதிநிதி சாரத் பெர்னாண்டோ, அகில இந்திய மீனவர் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மெரினாவில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
இதுகுறித்து சாரத் பெர்னாண்டோ கூறுகையில், ‘‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் சட்டமான தேசிய மீன்வள மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றக்கூடாது. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது. இதற்காகவே எங்களுடைய போராட்டத்தையும் மெரினாவில் நடத்தினோம். தி.மு.க. அரசு, தேசிய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்காத பட்சத்தில் வணிக துறைமுகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.
Related Tags :
Next Story