சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி


சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
x
தினத்தந்தி 10 Aug 2021 3:01 PM IST (Updated: 10 Aug 2021 3:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பெற்றோர் உதவி கேட்டதால், 10 வயது சிறுவனின் சிறுநீரக பிரச்சினைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூரை சோ்ந்த 10 வயது சிறுவன் நவீன். இவனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தனியாா் ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் சிறுவனின் பெற்றோரான புஷ்பராஜ்-ரேணுகாதேவி தம்பதியினா் வறுமையில் வாடுவதால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனா்.

அங்கு முதல்-அமைச்சா் மருத்துவ காப்பீட்டு திட்டம் காா்டு இருந்தால் சிறுவனுக்கான சிகிச்சையை இலவசமாக செய்யலாம் என்று கூறினா். ஆனால் மருத்துவ காப்பீடு காா்டு இல்லை. தற்போது கோவிலம்பாக்கத்துக்கு வீடு மாற்றி சென்று விட்டதால் ரேஷன் காா்டும் இல்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சி சென்றாா். இதற்காக அவர் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். இதையறிந்த சிறுவனின் பெற்றோர், சென்னை விமான நிலையத்துக்கு சென்று அமைச்சரை சந்தித்து தங்களது 10 வயது மகனின் சிறுநீரக நோய் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.

அவற்றை விளக்கமாக கேட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடனடியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினாா். அத்துடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை தலைமை மருத்துவரை செல்போனில் தொடா்பு கொண்டு பேசிய அவர், சிறுவன் நவீனுக்கு உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்தார்.

Next Story