செப்டம்பர் 1-ந் தேதி பள்ளிகளை திறக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆய்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


செப்டம்பர் 1-ந் தேதி  பள்ளிகளை திறக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆய்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2021 8:29 PM IST (Updated: 10 Aug 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் செப்டம்பர் 1ந் தேதி பள்ளிகளை திறக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்செந்தூர்:
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி பள்ளிகளை திறக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார். 
பின்னர் அவர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிகள் திறப்பு 
வருகிற செப்டம்பர் 1-ந் தேதி பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்கள் வீட்டில் இருக்கும்போது மனதளவில் சோர்வடைந்து விடுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவ வல்லுனர் குழுவுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகளை ஆரம்பிக்கலாம் என வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. தினமும் 50 சதவீதம் மாணவர்களை வரவழைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பள்ளிகள், வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பாக தேவையான தயார் நிலையில் இருக்கின்றனவா? என்பது தொடர்பாக இன்று (ேநற்று) கலந்தாய்வு கூட்டம் நடந்துள்ளது. அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூடுதலாக எதுவும் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து எல்லாம் ஆராயப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வந்துவிடும். அவை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்து தயார் நிலையை ஏற்படுத்துவோம்.
தண்டனை 
தனியார் பள்ளிகளில் 85 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களிடம் 75 சதவீதம் கல்வி கட்டணம் பெறலாம். அதையும் செலுத்த முடியாதவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் நிர்வாகத்தில் ஒரு கமிட்டி நியமித்து பணம் பெறுவதில் முழுமையான விலக்கு அளிக்கலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதை அடிப்படையாக வைத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். அதை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அவர்களுக்கு மாவட்ட கல்வித்துறை மூலம் எச்சரிக்கை செய்கிறோம். தொடர்ந்து வலியுறுத்தினால் தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அதுதொடர்பாக வரைவு பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் எந்தெந்த வகுப்பிற்கு எத்தனை சதவீதம் குறைக்கப்படும் என்பது தெரிவிக்கப்படும். 
ஸ்மார்ட் போன்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம் குறைவான ஸ்மார்ட் போன் தான் உள்ளது. 60 சதவீதம் மாணவர்களிடம் போனில் தொடர்புகொள்ள முடிகிறது. மலைவாழ் பகுதியில் போனில் தொடர்புகொள்ள முடிவது இல்லை. எனவே, அரசு பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் வீட்டிற்கு சென்று பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அருகில் உள்ள 5 குழந்தைகளை வரச்சொல்லி எழுத, படிக்க வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
அரசு பள்ளிகளில் கடந்த வாரம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 379 பேர் சேர்ந்துள்ளனர். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பலர் அரசு பள்ளியை தேடி வந்து சேருகின்றனர். தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் அதிகமாக அரசு பள்ளியில் சேர்ந்தால் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதியை உருவாக்கி, ஆசிரியர்களை நியமித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
வரவேற்பு
முன்னதாக அவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் தி.மு.க.வினர் வரவேற்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாக அதிகாரி கலைவாணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story