கம்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கம்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கம்பம்:
கம்பத்தில் காந்திஜி பூங்காவை ஒட்டி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிகள் வாங்குவதற்காக கம்பம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வார்கள். இதனால் காலை நேரங்களில் உழவர் சந்தையை சுற்றியுள்ள பார்க் ரோடு, காந்திஜி வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு பகுதிகள் பரபரப்பாக காணப்படும்.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிரமம் அடைந்த பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் சரவணக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பார்க்ரோடு மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நகராட்சி கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து முன்கூட்டியே நகராட்சி சார்பில் கடைக்காரர்களுக்கு அறிவிப்பு செய்ததால், அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். இருப்பினும் சில இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
Related Tags :
Next Story