தேனி அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி; மனைவி படுகாயம்


தேனி அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி; மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 10 Aug 2021 9:42 PM IST (Updated: 10 Aug 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். உடன் சென்ற அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

தேனி:
தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். உடன் சென்ற அவரது மனைவி படுகாயம் அடைந்தார். 
மோட்டார் சைக்கிள்
தேனி அருகே உள்ள ஆதிப்பட்டி சாஸ்தாகோவில் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் அருண்பாண்டியன் (வயது 27). இவர் போடியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (26). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. 
இந்தநிலையில் அருண்பாண்டியன் நேற்று தனது மனைவியுடன் ஆதிப்பட்டியில் இருந்து போடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தேனி-போடி சாலையில் கோடாங்கிபட்டி தேவர் சிலை அருகில் சென்ற போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை அதன் டிரைவர் நிறுத்தி ஆட்களை இறக்கி, ஏற்றிக்கொண்டு இருந்தார். இதனால், அருண்பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார்.
வாலிபர் பலி
அப்போது பின்னால் ஒரு லாரி அசுர வேகத்தில் வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி ஜெயப்பிரியா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஜெயப்பிரியா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரை கைது செய்தனர்.

Next Story