உத்தமபாளையத்தில் முக கவசம் அணிய அறிவுறுத்திய ஆர்.டி.ஓ.விடம் வாக்குவாதம்; 2 பேர் கைது
உத்தமபாளையம் பஸ் நிலையத்தில் முக கவசம் அணிய அறிவுறுத்திய ஆர்.டி.ஓ.விடம் வாக்குவாதம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தமபாளையம்:
வெளியூர்களில் இருந்து உத்தமபாளையம் பஸ் நிலையத்திற்கு வரும் அரசு பஸ்களில் பயணிகள் முக கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்து ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் தாசில்தார் அர்ச்சுனன், துணை தாசில்தார்கள் சுருளி, முருகன் மற்றும் வருவாய்த்துறை நேற்று முன்தினம் இரவு திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு அரசு பஸ்சில் ஆய்வு செய்த ஆர்.டி.ஓ., முக கவசம் அணியாத பயணிகளை கண்டித்தார். மேலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதற்கிடையே அந்த பஸ்சில் வந்த கம்பத்தை சேர்ந்த சத்திய சேனை இந்து மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மாநில செயலாளர் சுசி கணேசன் (வயது 51), மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் (39) ஆகியோர் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதை பார்த்த ஆர்.டி.ஓ., அவர்களை முக கவசம் அணிய அறிவுறுத்தினார். அப்போது ஆர்.டி.ஓ.விடம், சுசி கணசேனும், ஜெயக்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் ஆர்.டி.ஓ.விடம் வாக்குவாதம் செய்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் மீது உத்தமபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசிணேசன், ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story