விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் இன்றி நடந்தது
விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் இன்றி நடந்தது
விருத்தாசலம்,
திருவிழா
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா விருத்தாம்பிகை அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
தேரோட்டம்
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகளான விருத்தாம்பிகை அம்மன், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்கள் ஓத கோவில் உட் பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தது. வழக்கமாக தேரோட்டம் கோவில் முன்பு தொடங்கி நான்கு வீதிகளை சுற்றி வந்து மீண்டும் நிலையை வந்தடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக. இந்தாண்டு கோவில் திரு விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
திருக்கல்யாண உற்சவம்
இதன் காரணமாக கோவில் கதவுகள் பூட்டப்பட்டதோடு, கோவிலுக்குள்ளேயே தேரோட்டம் நடைபெற்றது. இருப்பினும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்றபடி விருத்தாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிமறுக்கப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story