கடலூர் புதுப்பாளையத்தில் புதைவட கேபிள் மின்இணைப்பு பெட்டியில் தாமிர கம்பி தொடர் திருட்டு நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை


கடலூர் புதுப்பாளையத்தில் புதைவட கேபிள் மின்இணைப்பு பெட்டியில் தாமிர கம்பி தொடர் திருட்டு நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 10 Aug 2021 10:08 PM IST (Updated: 10 Aug 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் புதுப்பாளையத்தில் புதைவட மின்கேபிள் இணைப்பு பெட்டிகளில் தொடர்ந்து தாமிர கம்பி திருட்டு நடக்கிறது. நள்ளிரவில் கைவரிசை காட்டும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர், 

புதைவட கேபிள்

கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக புயல்-மழைக்காலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து அடிக்கடி மின்விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க 45 வார்டுகளிலும் புதைவட கேபிள் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, மின்வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெருவோரம் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் மின்கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட இணைப்புகள் அனைத்தும், புதைவட கேபிள் மின் இணைப்பு பெட்டியுடன் இணைக்கப்பட்டு தடையின்றி மின்வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

மக்கள் அவதி

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் உள்ள புதைவட கேபிள் மின்இணைப்பு பெட்டிகளை உடைத்து, அதில் இருக்கும் ‘பியூஸ்-கேரியர்’-ஐ இரவு நேரத்தில் மர்மநபர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். இதனால் மின்தடை ஏற்படுவதால், இரவில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து மறுநாள் காலை பொதுமக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் பியூஸ் கேரியர் பொருத்தப்பட்டு, மின்வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த திருட்டு சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால் நள்ளிரவில் நடக்கும் இந்த திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசாரும், மின்வாரிய ஊழியர்களும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமிர கம்பி திருட்டு

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெருவில் புதைவட கேபிள் மின்இணைப்பு பெட்டிகளில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள், மின்இணைப்பு பெட்டியை உடைத்து, அதில் பியூஸ் கேரியரில் உள்ள தாமிர கம்பியை திருடிச் செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் புதிய பியூஸ் கேரியர் பொருத்தப்பட்டு, மின்வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளோம். அதன் அடிப்படையில் தாமிர கம்பிகளை திருடிய மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story