இறுதி கட்டத்தை எட்டிய ரெயில்பாதை மின்மயமாக்கும் பணி
மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன
ராமநாதபுரம்
மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.
ரெயில் பாதை
நாடு முழுவதும் உள்ள ரெயில் பாதையை மின்மயமாக்குவதை தங்களின் கனவுத்திட்டமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்படி நாட்டில் டீசல் ரெயில்களை மின்ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டதன் மூலம் மாசு இல்லா பசுமை சூழலுக்கு வழிவகுத்ததுடன் ரெயில்வே நிர்வாகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதனால் அனைத்து ரெயில்பாதைகளையும் மின்ரெயில்பாதைகளாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் மின்மயமாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை-ராமேசுவரம் இடையேயான 161 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக மதுரை-மானாமதுரை இடையே 47 கிலோ மீட்டர் ரெயில்பாதையை கடந்த ஆண்டு முழுமையாக மின்பாதையாக மாற்றி முடிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மானாமதுரை-மண்டபம் இடையேயான 96 கிலோ மீட்டர் தூரத்திலான ரெயில்பாதை மின்பாதையாக மாற்றும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 9.5 மீட்டர் உயரம் முதல் 10.6 மீட்டர் உயரத்திலான மின்கம்பங்கள் அமைத்து மின்கேபிள்கள் பதிக்கும் பணி இந்த ரெயில்பாதையில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இறுதிகட்ட பணிகள்
ராமநாதபுரம் ரெயில் நிலைய பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதிர்வுகளை தாங்கும் வகையிலான தண்டவாளங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான மின்கம்பங்கள், கேபிள்கள், கம்பிகள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் கண்ணூர், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து ரெயில்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போது ரெயில் போக்குவரத்து பெரிய அளவில் இல்லாததால் பணிகள் தடையின்றி வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் ராமநாதபுரம் வரையிலான இந்த பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. மானாமதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான இந்த பணியில் 18 மீட்டர் இடைவெளியில் மொத்தம் 257 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு வாரத்தில் இந்த பணிகள் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் முதல் மண்டபம் வரையிலான பாதை மின்மயமாக்கும் பணி தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாம்பன் ரெயில்பாலம் போடப்பட்டு விட்டதும் அதிலும் மின்பாதை அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மதுரை-ராமேசுவரம் வரையிலான ரெயில்பாதை மின்மயமாகிவிட்டால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் புண்ணியதலமான ராமேசுவரத்தை வடமாநிலங்களில் இருந்து இணைக்கும் வகையில் புதிய அதிவேக ரெயில்கள் விட வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story