பரிகார பூஜை செய்யும் வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை


பரிகார பூஜை செய்யும்  வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை
x
தினத்தந்தி 10 Aug 2021 10:21 PM IST (Updated: 10 Aug 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

பரிகார பூஜை செய்யும் வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை

வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே குடிப்பழக்கத்தை பெற்றோரிடம் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் இருவர் பரிகார பூஜை செய்யும்  வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பரிகார பூஜைகள் 
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நடேசன் நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், காளமேகப்பெருமாள் என்கிற விஜய் பிரகாஷ் (19), தினேஷ், கார்த்திகேயன் என்ற 3 மகன்களும், மணிமேகலை என்ற மகளும் உள்ளனர். வரதராஜன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பரிகார பூஜைகள் செய்து குடும்பம் நடத்தி வந்து கொண்டிருக்கிறார்.
இதனால் தினமும் கொடுமுடி சென்று பூஜை செய்து வர சிரமமாக இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  கொடுமுடி அருகே உள்ள கரட்டூருக்கு குடும்பத்துடன் சென்று அங்கே குடியிருந்தார். காளமேகப்பெருமாள் மட்டும் வெள்ளகோவில், திருவள்ளுவர் நகரில் தங்கி பரிகார பூஜைகள் செய்து வந்தார். 
பூட்டப்பட்ட அறை 
பரிகார பூஜைகள் இல்லாத நேரங்களில் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காளமேகப்பெருமாள் வேலைக்கு சென்று வந்தார். காளமேகப்பெருமாள் தினமும் தனது செல்போனில் அப்பா மற்றும் அம்மாவிடம் போன் செய்து பேசி வந்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் வரதராஜன், தனது மகனுக்கு போன் செய்துள்ளார். 
அப்போது காளமேகப்பெருமாளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் நேற்று வெள்ளகோவிலுக்கு வந்தார். அங்கு காளமேகப்பெருமாள் தங்கியிருந்த அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார்.
வெட்டு காயத்துடன் பிணம்
மேலும், வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் மகனை தேடிப்பார்த்தார். அப்போது வெள்ளகோவில் அருகே உள்ள வேப்பம்பாளையம் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் மதகு அருகே காளமேகப்பெருமாள் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வரதராஜன் இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுத்தார். 
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காங்கேயம்  துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் தலைமையில், காங்கேயம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி,  வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தலைமை காவலர்கள் மணிமுத்து, சதீஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 
2 பேர் கைது 
இ்ந்த தனிப்படையினர் வெள்ளகோவில் பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளகோவிலில் முத்தூர் செல்லும் ரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வெள்ளகோவில் கொங்கு நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா (19) என்பதும், காளமேகப்பெருமாளின் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். 
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும், காளமேகப்பெருமாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 
மது அருந்துவதாக...
இதன் பின்னர் கைதான 2 பேரும் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- 
காளமேகப்பெருமாள் உள்பட நாங்கள் 3 பேரும் நண்பர்கள். இந்நிலையில் காளமேகப்பெருமாள் எங்களது குடும்பத்தாரிடம், நாங்கள் மது அருந்திவிட்டு, ஊர் சுற்றி வந்து கொண்டிருப்பதாகவும்,. மேலும், எங்கள் இருவரின் நடவடிக்கை சரியில்லை என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் எங்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் காளமேகப்பெருமாளை கொலை செய்ய முடிவு செய்தோம். அதன்படி கடந்த 8-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் காளமேகப்பெருமாளை அழைத்து சென்றோம். 
வெள்ளகோவிலை அடுத்த வேப்பம்பாளையம் அருகே செல்லும் பி.ஏ.பி. பாசன கிளை வாய்க்கால் மதகு அருகே சென்ற பின்னர் நாங்கள் மறைத்து வைத்து கொண்டு வந்த அரிவாளால் காளமேகப்பெருமாளை வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தோம். பின்னர் அங்கிருந்து நாங்கள் தப்பிச்சென்றோம். இந்த நிலையில் போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
2 பேரையும் கைது செய்த வெள்ளகோவில் போலீசார், அவர்களை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து கைதான  2 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story